15ம் நாள் போர் - “உக்ரைன் அரசை கவிழ்க்கும் நோக்கம் இல்லை” - ரஷியா விளக்கம்
உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷியா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகாரோவா கூறியிருப்பதாவது;-
“உக்ரைன் விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்காக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறும்.
உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் போா் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.